
வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் உருவாக பேருதவியாக இருந்தவரான ராஜீவ் மோத்வானி நீச்சல் பயின்றபோது, நீரில் மூழ்கி மூச்சுத் திணறி மரணமடைந்தார்.
47 வயதாகும் இந்திய அமெரிக்கரான ராஜீவ் மோத்வானி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் அறிவியல் பிரிவில் பேராசரியராக பணியாற்றி வந்தார்.
கூகுள் நிறுவனத்தை உருவாக்குவது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் முயன்றபோது அதற்கு உறுதுணையாக இருந்தவர் ராஜீவ் மோத்வானி.
கூகுள் நிறுவனம் வெற்றிகரமாக உருவெடுக்கவும் அவர் பல்வேறு உதவிகள், ஆலோசனைகளை நல்கியுள்ளார். கூகுள் நிறுவனர்களும், மோத்வானியும் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது இதற்கு உதவியாக இருந்தது.
இந்த நிலையில், கலிபோர்னியாவின் ஆதர்டன் நகரில் உள்ள தனது வீட்டில் நீச்சலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மோத்வானி நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
மோத்வானிக்கு உண்மையில் நீச்சல் தெரியாதாம். இருந்தாலும் தானே பழக வேண்டும் என்ற முடிவுடன் அவர் தனியாக நீச்சல் கற்றுக் கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது.
மோத்வானிக்கு ஆஷா ஜடேஜா என்ற மகனும், நைத்ரி, அன்யா ஆகிய மகள்களும் உள்ளனர்.
1962ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி ஜம்முவில் பிறந்தவர் மோத்வானி. டெல்லியில் வளர்ந்தார். கான்பூர் ஐஐடியில் 1983ம் ஆண்டு கம்ப்யூட்டர் அறிவியலில் பட்டம் பெற்றார்.
1988ம் ஆண்டு கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
ஸ்டான்போர்ட் பேராசிரியராக இருந்து வந்த அவர், மிடாஸ் எனப்படும் மைனிங் டேட்டா அட் ஸ்டான்போர்ட் புராஜெக்ட்டையும் நிறுவியவர்.
சிலிக்கான் வேலி பகுதியில் பல முயற்சிகளை ஆதரித்து, உதவியாக இருந்தவர் மோத்வானி. இருப்பினும் அவற்றில் மிகவும் புகழ் பெற்றதாக மாறியது கூகுள் மட்டுமே.
No comments:
Post a Comment